கட்சி உத்தரவை மீறி... ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி: நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
- அ.தி.மு.க. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை இல்லை.
- கட்சி கட்டுப்பாட்டை மீறி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் மொத்தம் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரும் தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டது.
இவர் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில் தேர்தலில் இவர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்த செந்தில் முருகன் கடந்த 2023-ம் ஆண்டு ஓ.பி.எஸ் அணியில் இருந்து அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
அடுத்த சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளராக பொறுப்பேற்று வந்தார்.
தற்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என அறிவித்த நிலையில் செந்தில் முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறி மனு தாக்கல் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து செந்தில் முருகன் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பிரச்சினைகள் எனக்கு அதிகம் தெரியும். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன். அதற்காக அ.தி.மு.க. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவேன் என்பது குறித்து பிரசாரத்தில் எடுத்துரைப்பேன். நிச்சயம் எனக்கு இந்த தேர்தல் திருப்புமுனைமையாக இருக்கும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாளையில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றார்.
இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கே.வி.ராமலிங்கம் கூறும் போது, செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இருப்பது உண்மைதான். கட்சி தலைமை அறிவிப்புக்கு மாறாக அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் அவர் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.