உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை

Published On 2025-01-19 12:11 IST   |   Update On 2025-01-19 12:11:00 IST
  • சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
  • சாரல் மழை பெய்த நேரங்களில் மட்டும் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலில் தினந்தோறும் சீதோஷ்ண நிலை மாறி வரக்கூடிய நிலையில் டிசம்பர் 2-வது வாரத்தில் இருந்து பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் உறை பனியுடன் கூடிய கடுங்குளிரும் நிலவும். ஆனால் இந்த ஆண்டில் சீதோஷ்ண நிலை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.

இந்நிலையில் பகல் நேரங்களில் கடுங்குளிர் நிலவிவரக்கூடிய நிலையில் அவ்வப்போது சாரல் மழையும், கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நகர் பகுதிகளான ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் மற்றும் அனைத்து மலைச்சாலைகளிலும் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

ஏரி சாலையில் இன்றும் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பனிமூட்டத்திற்கிடையே படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்த நேரங்களில் மட்டும் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை தொடங்கிய மிதமான மழை இன்று பலத்த மழையாக பெய்து வருகிறது.

விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அதிகமாக விடுதிகளில் நிரம்பி வழிந்த நிலையிலும் விடாது கொட்டும் மழையினால் சுற்றுலா இடங்களை காண முடியாமல் தங்கள் அறையிலேயே முடங்கினர்.

பழனியிலும் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை சாரல் மழையாக பெய்து பின்னர் கன மழையாக கொட்டித் தீர்த்தது.

பழனியை நோக்கி தற்போது பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஆங்காங்கு உள்ள மண்டபங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.

நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை பக்தர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் ஒதுங்க இடமில்லாமல் ஆங்காங்கு கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. சிறுமலை, அடியனூத்து மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. 

Tags:    

Similar News