நாகர்கோவிலில் இன்று உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்ததால் கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்
- மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
- நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் :
அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும். செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும். மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவுக்கு பின் அவர்களது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் இன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நாகர்கோவிலில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி கிராம கோவிலில் பணியாற்றும் பூசாரிகள் ஏராளமானோர் இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கிடையாது எனவும் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனால் பூசாரிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் மாநகர அமைப்பாளர் சரவணன், மோகன், ஷர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விசுவ இந்து பரிசத் நிர்வாகிகள் மற்றும் கோவில் பூசாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.