தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல்
- தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகருக்குள் வந்து செல்லும் தனியார் பஸ்கள் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவிலான ஹாரன்களை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் மேலூர் மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆகியோர் மேலூர் பஸ் நிலையம் முன்பாக சுமார் 10 தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். அப்போது 6 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஹாரன்களை அப்புறபடுத்தினர்.
மேலும் நகருக்குள் அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களை இயக்ககூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க அனுமதிக்ககூடாது, போக்கு வரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பனவற்றை பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரி டம் எடுத்து கூறினர்.
இருந்தபோதிலும் மேலூர் நகர பகுதிக்குள் காலையில் இருந்து இரவு வரை குடிநீர் வினியோகம் செய்ய வரும் மினி லாரிகள், தெருக்களுக்குள் வரும்போது அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை ஒரே இடத்தில் நின்று கொண்டு தொடர்ந்து அடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
அதுபோன்ற வாகனங்களையும் சோதனை செய்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹா ரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.