உள்ளூர் செய்திகள்

3-வது நாளாக தியானம்: படிகளில் ஏறி இறங்கி உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி

Published On 2024-06-01 10:57 IST   |   Update On 2024-06-01 10:57:00 IST
  • காந்தி மண்டபத்துக்கும் சென்று பார்வையிட முடிவு.
  • உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டார்.

சென்னை, ஜூன். 1-

பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.

பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனி படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அவர் அங்குள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நேற்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து காவி உடைகளை அணிந்து கொண்ட பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தி விட்டு சிறிய கமண்டலத்தில் இருந்த புனித நீரை கடலில் ஊற்றினார்.

நெற்றியில் 3 விரல்களால் போடப்பட்ட விபூதி பட்டை அதன் நடுவில குங்கும பொட்டு, கையில் ருத்ராட்ச மாலை என முற்றும் துறந்த துறவி கோலத்திலேயே தியானம் மேற்கொண்டார்.

இன்றும் (சனிக்கிழமை) 3-வது நாளாக பிரதமர் மோடி தனது தியானத்தை தொடர்ந்தார். காலை 5.50 மணி அளவில் தனது அறையில் இருந்து காவி உடையிலேயே மோடி வெளியில் வந்தார். இன்றும் சூரிய உதயத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார். பின்னர் கமண்டலத்தில் இருந்த புனித நீரையும் கடலில் ஊற்றினார்.

பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்து கடல் அழகை ரசித்து பார்த்த அவர் அங்கிருந்த படிகளின் மேல் ஏறி இறங்கி சிறிய அளவிலான உடற் பயிற்சி யையும் மேற் கொண்டார்.

இன்றைய தியானத்தை காலை 7.30 மணி அளவில் தொடங்கிய பிரதமர் மோடி மதியம் 1.30 மணி வரையில் தியானம் மேற்கொண்டார். அதன் பிறகு தியானத்தை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி செல்கிறார்.

விவேகானந்தர் மண்ட பத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி 3.30 மணி அளவில் விருந்தினர் இல்லத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலை மற்றும் காந்தி மண்டபத் துக்கும் சென்று பார்வையிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கனனியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி உணவு வகைகள் எதையும் சாப்பிடவில்லை. இளநீர், மோர் மற்றும் குறைவான அளவில் உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டார்.

அதே நேரத்தில் யாரிட மும் அவர் பேசாமல் மவுன விரதமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News