வேப்பந்தட்டை அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பஸ் விபத்து: ஒருவர் பலி, 10-பேர் காயம்
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த வீட்டில் புகுந்தது.
- இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் கோவிலுக்கு புறப்பட்டனர். பஸ்சை சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.
நெய்குப்பையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பஸ் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் திடீரென புகுந்தது. இதில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் வீட்டு க்குள் தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி ( 40) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சன்னாசி, மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுற்றுலா பஸ் வீட்டின் சுவரில் மோதுவதற்கு முன்பாக அருகில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது மோதி விட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது பஸ்ஸில் பயணம் செய்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.