சென்னை மாரத்தான் ஓட்டம்- போக்குவரத்து மாற்றம்
- மாரத்தான் ஓட்டம் 4 பிரிவுகளாக நடக்கிறது.
- போர் நினைவுச் சின்னத்தில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
சென்னை:
சென்னை மாரத்தான் ஓட்ட பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மாரத்தான் ஓட்டம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மாரத்தான் ஓட்டம் 4 பிரிவுகளாக நடக்கிறது. நேப்பியர் பாலத்தில் இருந்து கடல்சார் பல்கலைக்கழகம் வரை இந்த ஓட்டபந்தயம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அடையாறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலத்தில் இருந்து திருப்பி விடப்படுகிறது. போர் நினைவுச் சின்னத்தில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், வி.எம். தெரு சந்திப்பில் இருந்து திருப்பிவிடப்படும். காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள், ராஜீவ் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்கள், எல்.பி.சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக செல்ல வேண்டும்.
மேற்கண்ட தகவல்களை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.