கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிப்பு
- பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
திரிசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது45). தொழிலாளி. இவருக்கும் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிஉள்ளனர். இந்த நிலையில் பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே இன்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பாபு வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றபடி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் எரியும் தீயுடன் அங்கும் இங்கும் ஓடினார். இதனை கண்டு அருகில் நின்றவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த சிலர் பாபுவின் உடலில் பற்றிய தீயை அணைத்து மீட்டனர். பின்னர் உடல்கருகிய அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.