45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: இன்று மாலை உபரி நீர் திறப்பு
- நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது.
- நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி ,தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வேலூர், சென்னை உள்பட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
மேட்டூர் அைணயில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படும்.
இதேபோன்று கால்வாய் பாசன தேவைக்காக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக ஜூலை 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை 43-வது முறையாக எட்டி கடந்த ஆண்டு (2024) முதன்முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது.
ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணை வரலாற்றில் 43-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி முதல் முறையாக நிரம்பியது.
அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து வருடத்தின் கடைசி நாளான நேற்று (31-ந்தேதி) அணை 45-வது முறையாக நிரம்பி இருக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியிலிருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை 120 அடி எட்டி உள்ளதால் மேட்டூர் காவிரி உபரி நீரேற்றும் திட்டத்தின் கீழ் திப்பம்பட்டியில் உள்ள உபரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் செயல்பாட்டினை இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.