உள்ளூர் செய்திகள் (District)

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

Published On 2023-06-13 23:32 GMT   |   Update On 2023-06-14 02:42 GMT
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
  • பல இடங்களில் சுமார் 12 முதல் 18 மணி நேரம் நடந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், முழுக்க முழுக்க இது மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். எந்தக் காரணத்திற்காக அமலாக்கத்துறை வந்தது என தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நிறைவடைந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியானது.

Tags:    

Similar News