காதல் மனைவி கொலை: பெண்ணை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன், மாமியார் கைது
- 8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர்.
- தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது 2-வது மனைவி சரண்யா (29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்த போது. இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 31-ந் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் திடீரென்று சரண்யா மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகள் சரண்யாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முடியாததால், அவரது தாயார் அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காவேரி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்தார்.
அப்போது சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். ஆனாலும், சரண்யா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது மகளை காணவில்லை எனபுகார் அளித்தார்.
மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. திருவண்ணாமலை போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.
அப்போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. சரண்யாவின் தலை, மார்பு பகுதி மற்றும் ஒரு தொடை ஆகியவை மட்டுமே அங்கு கிடந்தன. அதை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்து வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் கோபியை கைது செய்தனர். கணவன் மனைவி இடையே சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் கோபி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்தார். சரண்யாவின் உடலை 8 துண்டகளாக வெட்டியுள்ளார்.
பின்னர் இது குறித்து அவருடைய தாயார் சிவகாமியிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சரண்யாவின் உடல் பாகங்களை ஒரு டிராவல் பையில் வைத்து அடைத்தனர்.
பின்னர் இது குறித்து கோபி தன்னுடைய நண்பர் ராஜேந்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரை எடுத்து வந்தார்.
அவருடைய காரில் 3 பேரும் சரண்யாவின் உடல் பாகங்களை பையில் வைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிக்கு சென்றனர்.
8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர். தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன. மீதி உள்ள கை கால்கள் உள்ளிட்ட 5 பாகங்கள் கிடைக்கவில்லை.
அவற்றை கைப்பற்ற போலீசார் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோபியின் தாயார் சிவகாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.