நரசிங்கபுரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகை
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 71 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முற்றுகை
இதைதொடர்ந்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் வாழ்வாதாரமே இந்த சம்பளத்தை நம்பி உள்ளது. வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது தீபாவளி வருவதால் எங்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என முறையிட்டனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர், நகரமன்ற தலைவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்தால் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.