உள்ளூர் செய்திகள்

சக்தி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வேதநாயகி அம்மன்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்–

Published On 2023-10-16 15:26 IST   |   Update On 2023-10-16 15:26:00 IST
  • அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
  • வருகிற 24-ந் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதநாயகி அம்மன்- வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. முன்னதாக மூல ஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், எழுந்தருளும் அம்மனுக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்தி அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலெட்சுமி அம்மன் கேடயத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

தொடர்ந்து, 10 நாட்களும் அம்மனுக்கு வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி சுந்தரமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று தோப்புத்துறை ரெயில்வே கேட் அருகில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, பணியாளா்கள், உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News