பெரியமருதூர் அருகேசிறுமியிடம் செயின் பறித்த 2 பேர் கைது
- செந்தில்நாதன் மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரியமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனுஸ்ரீ அவரது சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ்குமார்(32), மதுக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கிஷோர்குமார்(21) ஆகியோர், சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.
அப்போது தனுஸ்ரீ நிலைதடுமாறி சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். உடனே தனுஸ்ரீ சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே ரமேஷ்குமாரும், கிஷோர்குமாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர்.
இருப்பினும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து, ரமேஷ் குமார் மற்றும் கிஷோர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.