தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிளில் துப்பட்டா சிக்கி ஆசிரியை சாவு கடலூரை சேர்ந்தவர்
- பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊருக்குசென்றார்
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கடலூர்:
கடலூர் சி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ராஜ்குமார் (வயது 28) இவரது மனைவி ஜஸ்வர்யா (21) இருவரும் கள்ளக்குறிச்சியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊரான சி.என். பாளையத்திற்கு சென்றவர்கள் மீண்டும் கடந்த 3- ந் தேதி சி.என்.பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று கொண்டிருந்தனர்.
தியாகதுருகம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அணிந்திருந்த துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் ஜஸ்வர்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து ஐஸ்வர்யாவின் அண்ணன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஜஸ்வர்யாவின் கணவர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.