கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஒரு வார, 3 மாத திறன் பயிற்சி - தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மூன்று மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- மூன்று மாத காலம் பயிற்சி முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் அமையவுள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூர் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மூன்று மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மூன்று மாத காலம் பயிற்சி முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் அமையவுள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூர் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடக்கிறது.
பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18 லிருந்து 40-க்குள் இருக்க வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மர வேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், பார் பெண்டிங் மற்றும் ஸ்காபோல்டிங் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், உணவு தங்குமிடம் ஆகியவை இலவசம். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் எல் அண்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையத்தால் 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி 7 நாட்கள் தமிழ்நாடு கட்டுமானக் கழகம் அமைய உள்ள தையூரில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருப்பதுடன் மூன்று ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மர வேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், பார் பெண்டிங் மற்றும் ஸ்காபோல்டிங் ஆகிய பயிற்சியாளர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய ரூ.800 வழங்கப்படும். இந்தத் தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
தமிழ்நாடு கட்டுமானக் கழகம், எல் அண்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எனவே நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பதிவு பெற்ற விருப்பமுள்ள தொழிலாளர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் நெல்லை மாவட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், எண்.39 ஆணையார்குளம் விரிவாக்கம், வசந்தம் அவென்யூ, திருமால்நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி-627007. தொலைபேசி எண்.0462 2555010 என்ற முகவரியிலும், தென்காசி மாவட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், எண்.275, பிரதான தெரு, கே.ஆர்.காலனி, தென்காசி என்ற முகவரியிலும் நேரில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.