உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு: நீலகிரியில் சைபர் பள்ளிக்கூடம்- சைபர் கிரைம் போலீசார் ஏற்பாடு

Published On 2025-01-26 11:28 IST   |   Update On 2025-01-26 11:28:00 IST
  • சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
  • சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.

ஊட்டி:

சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலமாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓ.டி.பி. உள்ளிட்ட தகவல்களை யாரும் கூற வேண்டாம்.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.

டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News