உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளி கொலுசு ஆர்டர்கள் வர தொடங்கின

Published On 2024-12-26 07:41 GMT   |   Update On 2024-12-26 07:41 GMT
  • தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.
  • பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது.

சேலம்:

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செய்யப்படும் கலை நயமிக்க வெள்ளி கொலுசுகளுக்கு பெரும் மவுசு உண்டு. இதனால் இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வெள்ளி பொருட்கள் உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியும். ஆனால் கடந்த தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.

தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி விற்பனை அதிகரிக்கும் என்பதால் அப்போது ஆர்டர்கள் வரும் என வெள்ளி தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர்.

அதன் தொடர்ச்சியாக பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் தற்போது வர தொடங்கி உள்ளன. இதனால் அதனை தயாரிக்கும் பணியில் வெள்ளி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது-

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது. இந்த ஆர்டர்களை தயாரிக்க தொடங்கி உள்ளோம். முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 75 சதவீத ஆர்டர்கள் கிடைத்து விடும். ஆனால் தற்போது 25 சதவீத ஆர்டர்கள் மட்டும் கிடைத்துள்ளன.

அதாவது ஒரு லட்சம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 25 ஆயிரம் வெள்ளி கொலுசுகளுக்கு மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆர்டர்கள் குறைந்துள்ளது. மீதி ஆர்டர் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

வெள்ளி விலை ஒரு கிராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 110 ரூபாய் வரை சென்ற நிலையில் தற்போது விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வெள்ளி பொருட்களை பொது மக்கள் வாங்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News