உள்ளூர் செய்திகள்

போலி ஆதார் அட்டை கொடுத்து விடுதிகளில் தங்கி டி.வி.க்கள் திருடிய வாலிபர்

Published On 2025-02-09 11:08 IST   |   Update On 2025-02-09 11:08:00 IST
  • புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • பல்வேறு இடங்களில் திருடிய 10 டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி:

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 26-ந் தேதி ஒரு வாலிபர் அறை எடுத்து தங்கினார். அவர் தனது பெயர் தினேஷ் (வயது 25) என்றும், சொந்த ஊர் திருநள்ளாறு என்று கூறி ஆதார் அட்டை நகலை வழங்கினார்.

மறுநாள் காலை அவர் தங்கியிருந்த அறைக்கு விடுதி ஊழியர்கள் சென்று பார்த்த போது அவரை காணவில்லை. ஆனால் அந்த அறையில் இருந்த டி.வி. மற்றும் பக்கத்து அறையில் இருந்த டி.வி.யும் மாயமாகி இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கு அறை எடுத்து தங்கியவர் டி.வி.க்களை திருடி போர்வையில் சுற்றி எடுத்து சென்றது தெரியவந்தது. அதில் அவரது உருவமும் தெளிவாக பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மணம் பூண்டி பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது23) என்பது தெரியவந்தது. இவர் பண்ருட்டி, வடலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் போலி ஆதார் அட்டை கொடுத்து விடுதிகளில் தங்கி டி.வி.க்களை திருடி சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடந்து மணம் பூண்டி சென்ற போலீசார் விக்னேஷ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடிய 10 டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News