மணப்பாறை அருகே பி.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்
- ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர்.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பி. புதுபட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அணைத்து வெற்றி வாகை சூடினர்.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.