நெல்லை ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ரெயில்வே போலீசார்
- பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
வேலூர் அருகே நேற்று முன்தினம் ஓடும் ரெயிலில் சைக்கோ வாலிபர் ஒருவர், ரெயில் பெட்டியில் இருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ரெயிலில் இருந்து தள்ளி விட்டார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று நண்பகலில் வந்த திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இருந்த பயணிகளுக்கு சந்திப்பு ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்டர்சிட்டி ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி அதில் இருந்த பெண் பயணிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். காலியாக இருக்கும் பெட்டிகளில் தனிமையாக பயணிக்க வேண்டாம், சக பயணிகளுடன் சேர்ந்து பயணியுங்கள் என்று பெண் பயணிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
ரெயிலில் சந்தேக படும்படியாக நபர்கள் யாரும் பயணித்தாலோ, நடுவழிகளில் ஏதேனும் நபர்கள் ரெயில் பெட்டியில் ஏறினாலோ உடனடியாக பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் ரெயில்வே பாதுகாப்பு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறு தெரிவித்தால் அடுத்ததாக உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து வந்து விடுவார்கள் என்றும் அவர்கள் கூறி எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ரெயிலில் உள்ள பெட்டிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் பயணிக்கிறார்களா? என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.