இணைப்பு தண்டவாளத்தில் கிடந்த இரும்பு துண்டு, கற்கள்.
இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு-கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதியா?
- ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவ்வழியே ரெயில்கள் வந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கும்.
திருவொற்றியூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். இதில் திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் லூப் லைன் பாதை உள்ளது.
இந்த இணைப்பு தண்டவாளத்தின் இடையே பெரிய இரும்பு துண்டு மற்றும் கற்களை மர்ம நபர்கள் வைத்து சென்று விட்டனர். அவ்வழியே ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்ய சென்ற போது இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அகற்றினர்.
சரியான நேரத்தில் இணைப்பு தண்டவாளத்தில் இருந்து அவை அகற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் லூப்லைனை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு அந்த நேரத்தில் அவ்வழியே ரெயில்கள் வந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் ஏற்பட்ட பிரச்சனையால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ரெயில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இணைப்பு தண்டவாளத்தில் இரும்பு துண்டு மற்றும் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.