சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள்- ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
- நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர்.
- செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதே போல ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் வருகை தந்துள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்து பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்ச உச்சமாகும். சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.