கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் சமாதான பேச்சுவார்த்தை- கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது
- சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு ரத உற்சவ தீமிதி விழா நடைபெற்றது. அப்போது இரவு 9 மணியளவில் பக்கத்து கிராமமான பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
இதனைக் கண்ட விழாக் குழுவினர், பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9.45 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நாளை (8.4.2023) பேச்சு வார்த்தை நடத்தலாம். ஒரு கோவிலில் திருவிழா நடைபெறும் போது இதுபோல நடந்து கொள்ள வேண்டாம் என்று போலீசார் கூறினர்.
இதனையேற்ற பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சாலை மறியலை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து இன்று நண்பகல் 12 மணியளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இதில் சாலைமறியலில் ஈடுபட்ட தரப்பினரையும், மேல்பாதி கோவில் திருவிழா கமிட்டியையும் அழைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கு 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வளவனூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.