நத்தத்தில் இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
- காளை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது.
- காளை இறந்ததால் நத்தம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ளது அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை நேற்று உடல்நலக்குறைவால் இறந்துவிட்டது.
கோவில் முன்பு வைக்கப்பட்ட காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த கோவில் காளை அலங்காநல்லூர், பாலமேடு, கொசவபட்டி, அய்யாபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது.
தொடர்ந்து அந்த காளை கோவிலின் அருகிலேயே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஊரின் காவல் தெய்வமான அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவில் காளை இறந்ததால் நத்தம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.