உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு: தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் மானியம்

Published On 2023-05-28 12:36 IST   |   Update On 2023-05-28 12:36:00 IST
  • தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் மானியம் வழங்கபடும் என கலெக்டர் தெரிவித்தார்
  • மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.

பெரம்பலூர்,

தமிழக அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு, கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News