மணலி பயோ கியாஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் சுவர் இடிந்து என்ஜினீயர் பலி
- தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
- விபத்து தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
மணலி பல்ஜிபாளையம் சின்ன சேக்காடு அருகே மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
இங்கு சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகள் மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இங்குநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜினீயரான சரவணகுமார் (வயது 25) பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தொழிற்சாலையின் கண்காணிப்பு அறையில் சரவணகுமாரும், பொன்னேரியைச் சேர்ந்த லாரி டிரைவரான பாஸ்கரும் (35) பணியில் இருந்தனர்.
அவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல பயோ கியாஸ் எந்திரத்தை நிறுத்தினர். அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்த பயோ கியாஸ் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அறையின் சுவர் முழுவதும் இடிந்து தரை மட்டமானது.
இதில் என்ஜினீயர் சரவணகுமாரும், டிரைவர் பாஸ்கரும் சிக்கிக்கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த லாரி டிரைவர் பாஸ்கரை படுகாயத்துடன் மீட்டனர். ஆனால் என்ஜினீயர் சரவணகுமார் மீது கட்டிட இடிபாடுகள் பெரிய அளவில் இருந்ததால் உடனே அவரை மீட்க முடியவில்லை.
தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி என்ஜினீயர் சரவணகுமாரை பிணமாக மீட்டனர்.
பாய்லர் கியாஸ் வெடித்த சத்தம் கேட்டதும் அருகே குடியிருந்தவர்கள் ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டது என நினைத்து வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே வந்தனர். அவர்களுக்கு சற்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பயோ கியாஸ் வெடித்த போது குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் அதிர்ந்து குலுங்கின. இந்த கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விபத்து ஏற்பட்ட பகுதியை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விபத்து காரணமாக நள்ளிரவு 2 மணி வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. குடியிருப்புக்கு அருகே உள்ள பயோ கியாஸ் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று கூறி பொதுமக்கள் அதிகாரிகளி டம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கியாஸ் வெடித்த போது தீ அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பரவி இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். மேலும் இரவு நேரம் என்பதால் அதிக அளவிலான தொழிலாளர்கள் அங்கு தொழிற்சாலையில் இல்லை. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.