ஈரோடு மகளிர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
- அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார்.
- போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.
இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதனால் போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.
அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.