உள்ளூர் செய்திகள்

அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க பக்தர்கள் எதிர்ப்பு

Published On 2025-02-16 15:16 IST   |   Update On 2025-02-16 15:16:00 IST
  • கோவில் குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன.
  • கழிவு நீர் கோவில் குளத்தில் கலக்கவும் வாய்ப்பு உள்ளது.

பொன்னேரி:

பொன்னேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்டது.

இதன் கருவறையில் சுயம்பு வடிவாக தோன்றிய சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மேலும் கோவில் முன்பு உள்ள ஆனந்த புஷ்கரணி என்னும் திருக்குளத்தில் சிவபெருமான் எழுந்தருளி பார்வதி தேவியின் சாபத்தை நீக்கி அகத்திய மாமுனிவருக்கு காட்சியளித்ததாக புராணங்கள் கூறுகிறது.

பார்வதி தேவி நீராடிய இந்த ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றியதில்லை என்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த கோவில் குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. கடந்த ஆண்டு சிவனடியார்கள் சிலர் தாமாக முன்வந்து தங்கள் சொந்த பணத்தில் குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பினர்.

இந்த நிலையில் பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தை சுற்றிலும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக அதன் அருகிலேயே ஜே.சி.பி.எந்திரம் மூலம் நீளமாக பள்ளம் தோண்டி உள்ளனர்.

கோவில் குளம் அருகே கழிவு நீர்கால்வாய் அமைக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பள்ளம் தோண்டியபோது எந்திரத்தின் அதிர்வின் காரணமாக குளத்தைச் சுற்றி சில இடங்களில் கட்டமைக்கப்பட்ட கருங்கற்கள் விலகி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவில் குளத்தை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்தால் அதன் புனிதம் கெட்டுவிடும். இந்த நீர்நிலைப் பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது. கழிவு நீர் கோவில் குளத்தில் கலக்கவும் வாய்ப்பு உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் முன்பாக கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், குளத்தைச் சுற்றி தோண்டிய பள்ளத்தை மூடாமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். வழிபாட்டு தலத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News