பதட்டத்துடன் நடந்து முடிந்த பொள்ளாச்சி பலூன் திருவிழா
- பலூன்களில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலரும் விரும்பினர்.
- பட்டஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டச்சிறா பகுதியில் வயல் வெளியில் தரையிறங்கியது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
இந்த திருவிழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், தாய்லாந்து, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 8 ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் இடம் பெற்று இருந்தது.
இந்த பலூன்கள் வானில் பறக்கவிடும் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. பலூன்களில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலரும் விரும்பினர். குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் வெவ்வேறு பலூன்களில் 10 கி.மீ தூரத்துக்கு 100 அடிக்கு மேல் பறந்தபடி பயணித்து உற்சாகம் அடைந்தனர்.
ஆச்சிப்பட்டி மைதானத்தில் பறக்க தொடங்கும் பலூன்கள் அம்பராம்பாளையம் அருகே பொன்னாயூர் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே தரையிறங்கியது. யானை, புலி, கரடி வடிவிலான ராட்சத பலூன்கள் வானில் உயர, உயர பறந்து செல்வதை பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.
3 நாட்கள் நடந்த இந்த ராட்சத பலூன் திருவிழாவை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவிலான மக்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் வானில் பறந்த பலூன்களை பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்றுமுன்தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ராட்சத பலூன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கன்னிமாரா கிராமத்திற்கு திசை மாறி சென்று விளைநிலத்தில் தரையிறங்கியது.
இதில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு பலூன் பாலக்காடு மாவட்டம் பட்டஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டச்சிறா பகுதியில் வயல் வெளியில் தரையிறங்கியது.
திசை மாறிய காற்றின் வேகம் காரணமாக அந்த வெப்ப காற்றழுத்த பலூன் இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் திசைமாறி சென்றது. அதில் பயணித்த பெண் மற்றும் அவரது மகள் பீதி அடைந்தனர்.
அவர்கள் 2 பேர் மற்றும் பைலட் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை பலூன் திருவிழா நடத்தியவர்கள் மீட்டு காரில் அழைத்து வந்தனர். வயலில் விழுந்த பலூனும் மீட்கப்பட்டது. இப்படி பல்வேறு பரபரப்புடனும், பதட்டத்துடனும் நடைபெற்று வந்த 3 நாள் பலூன் திருவிழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.