உள்ளூர் செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் `செட்' தகுதி தேர்வு ஒத்திவைப்பு

Published On 2024-06-06 12:36 IST   |   Update On 2024-06-06 12:36:00 IST
  • தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
  • தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை:

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "செட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரிய ராகலாம். செட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும்.

அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் செட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.

இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.

இந்நிலையில் 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இதனை தொடர்ந்து, செட் தேர்வு நடத்து வதற்கான விண்ணப்பங்களை பெற்று தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்திருந்தது.

இந்த தேர்வில் கலந்துக்கொள்ள சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் இருந்து இன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக உதவி பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முதன்முறையாக இந்த தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News