மின்தடையை பயன்படுத்தி திருப்பூர் சிறையில் இருந்து தப்பிய கைதி சிக்கினான்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர்.
- கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி சங்கிலி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி மாலை, சிறையில் விசாரணை கைதியாக இருந்த சூர்யா சிறையில் இருந்து தப்பினார். மின்தடையை பயன்படுத்தி அவர் தப்பியது தெரியவந்தது. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடி வந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திருப்பூர் வந்து மாவட்ட சிறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணை கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே சிறைத்துறை தனிப்படையினர், சூர்யாவின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சூர்யாவை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்த போலீசார், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.