ஓசூர் முனீஸ்வர் நகரில் பெரியார் பெயர் பலகை மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
- முனீஸ்வர் நகர் சர்க்கிள் அருகே, ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷ்ய் வாக்கரே தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- முனீஸ்வர் நகர், வ.உ.சி.நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு குவிந்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதிக்கு தந்தை பெரியார் சதுக்கம் என பெயர் வைக்க ஓசூர் மாநகராட்சியில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு சார்பில் 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 21-ந்தேதி, ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் தந்தை பெரியார் சதுக்கம் என்ற பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
இதற்கு அந்த பகுதி பொது மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி முனீஸ்வர் நகர் சர்க்கிள் அருகே, ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷ்ய் வாக்கரே தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகளும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநில துணை செயலாளர் விஷ்ணு குமார், சேலம் கோட்ட பஜ்ரங்தள் அமைப்பின் பொறுப்பாளர் தேவராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு வந்தனர்.
மேலும், முனீஸ்வர் நகர், வ.உ.சி.நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு குவிந்தனர். இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக நாகராஜ் மற்றும் விஷ்ணுகுமார், அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம், பெயர் மாற்ற தீர்மானத்தை வாபஸ் பெற்று முனீஸ்வரர் நகர் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.