குடியரசு தின விழாவையொட்டி கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இலவசம்
- முக்கிய வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு கட்டணம் இன்றி சென்று இயற்கை சூழலை கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இன்றும் விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இன்று குடியரசு தினத்தையொட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இலவசம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு கட்டணம் இன்றி சென்று இயற்கை சூழலை கண்டு ரசித்தனர்.
மேலும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, அப்சர் வேட்டரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேல்மலை பகுதியான மன்னவனூர், எழும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றுக்கும் சென்றனர்.
பொங்கல் விடுமுறைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குறைந்திருந்த நிலையில் தற்போது விடுமுறையையொட்டி அதிகமானோர் வந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.