உள்ளூர் செய்திகள்

பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனையா?

Published On 2025-01-26 14:02 IST   |   Update On 2025-01-26 14:02:00 IST
  • 2 கடைகளுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
  • பார்மலினை இறைச்சிகளில் கலந்தால் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை உடையது.

ராயபுரம்:

காசிமேடு துறைமுகத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடோன்களில் மீன்களை பதப்படுத்தி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

தரமற்ற மீன்கள் ரசாயனத்தால் பதப்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், உள்ளூர் மீன்களுடன் இந்த மீன்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் செல்வம், சதாசிவம் மற்றும் அதிகாரிகள் நேற்று காசிமேட்டில் உள்ள 20 மீன்குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில் இறால் மற்றும் மீன்கள் கெட்டுப் போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 450 கிலோ கெட்டுப்போன மீன்களை பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனர். இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

மேலும் இந்த மீன்களில் பார்மலின் என்னும் இறைச்சி கெட்டுப்போவதை தடுக்கும் ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து 6 மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகளிடம் கேட்ட போது, மீன்களின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவில் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளதா? இல்லையா? என்பது தெரிய வரும். இந்த முடிவு வர 6 நாட்கள் ஆகும். இந்த பார்மலினை இறைச்சிகளில் கலந்தால் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை உடையது. ஆனால் அது மனிதர்களின் உடலுக்கு நல்லது அல்ல. கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பரிசோதனை முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

காசிமேடு சந்தையில் ரசாயனம் கலந்த மீன் விற்பனை நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மீன்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. அதிகாரிகள் அடிக்கடி மீன் சந்தைகளில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News