சமூக ஆர்வலர் கொலை வழக்கு: மனைவி, குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
- புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர்.
- திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
மேலும் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி ஜகபர் அலி மசூதிக்கு சென்று திரும்பிய போது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப் பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராசு ,ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர் பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.
நேற்று இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்து வந்தவர்கள் தொடர்பாக அவரது 2-வது மனைவியிடம் விசாரித்தனர். அதன் மூலம் கொலையின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்தனர்.
அதன் பின்னர் இன்று கொலை நடந்த இடம் மற்றும் புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஜகபர் அலி கொலை சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் பிறப்பித்து உள்ளார்.