நிவாரணம் வழங்காதததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
- பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது. விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும் மேலும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட பொது மக்கள் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பள்ளி பாழடைந்துள்ளதாகவும் பள்ளிகளில் பல இடங்களில் மின் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாழடைந்த பள்ளியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற தாசில்தாரை அருகே உள்ள மொளசூர் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு அவரை முற்றுகையிட்டு தங்கள் ஊருக்கும் நிவாரணம் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.