உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வின் நெருக்கடியால்பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்பட்டது - தங்கமணி

Published On 2023-09-25 13:53 IST   |   Update On 2023-09-25 13:57:00 IST
  • அ.தி.மு.க.வின் நெருக்கடியால்பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசி உள்ளார்
  • பரமத்தி வேலூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசினார்

 பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கபிலர்மலை செல்லும் சாலை அருகே, பழைய தேசிய நெடுஞ்சாலை அருகில் அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர கழக செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, நகர செயலாளர்கள் சுகுமார், ரவீந்தர், வேலுச்சாமி மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, வேடசந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, தி.மு.க. ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டம், ரூ.25 ஆயிரம் மானியத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டமும் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டனர். தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் வரும் நிலையிலும் , எதிர்க்கட்சியான அதிமுகவின் நெருக்கடியால், குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 50 சதவீத குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News