உள்ளூர் செய்திகள்

தீபாவளி போனஸ் கேட்டு புதுக்கோட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2024-10-22 13:13 IST   |   Update On 2024-10-22 13:13:00 IST
  • சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படவில்லை.
  • வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க ப்படவில்லை.

புதுக்கோட்டை:

திருச்சி-காரைக்குடி சாலை, புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிளக்கில், சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது.

மேலும் இதன் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றனர்.

வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாகனங்கள் விரைவாக கடந்து செல்கின்றன.

இதனால் இங்கு போக்குவரத்து மிகவும் சீராக காணப்படுகிறது. கட்டணம் இல்லாமல் கடந்து செல்வதை பலர் காரில் அமர்ந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து பலருக்கு பகிர்ந்தனர்.

மேலும் சிலர் சுங்க கட்டணம் முன்பு நின்று தீபாவளி வரை இந்த பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று செல்போனில் பேசி வீடியோ பதிவு செய்தனர்.

Tags:    

Similar News