உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையங்கள் தரவரிசை: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு 3-வது இடம்

Published On 2024-09-11 08:55 GMT   |   Update On 2024-09-11 08:55 GMT
  • தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.
  • கடந்த நிதியாண்டை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை:

நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், புறநகா் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

முன்னதாக 2017-18 நிதியாண்டில் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு ரெயில்வே வாரியம் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


இது குறித்து ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் ரெயில் நிலையங்கள் அனைத்தும் கடந்த நிதியாண்டை (2023-24) அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப் பட்டுள்ளன. இதில் 5,945 புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள், 578 புறநகா் ரெயில் நிலையங்கள், 2,286 ஹால்ட் ரெயில் நிலையங்கள் என 8,809 ரெயில் நிலையங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள் 6 தரங்களிலும், புறநகா் ரெயில் நிலையங்கள் மற்றும் ஹால்ட் ரெயில் நிலையங்கள் 3 தரத்திலும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலை யங்களில் முதல் தரத்தில் 28, 2-ம் தரத்தில் 113, 3-ம் தரத்தில் 307, 4-ம் தரத்தில் 335, 5-ம் தரத்தில் 1,063, 6-ம் தரத்தில் 4,099 ரெயில் நிலையங்கள் உள்ளன.

இதில் புதுடெல்லி ரெயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. தொடா்ந்து ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி அவுரா ரெயில் நிலையம் இரண்டாம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

தொடா்ந்து முதல் பட்டியலில் தெற்கு ரெயில்வேயின் சென்னை எழும்பூா், தாம்பரம் ரெயில் நிலையங்கள் உள்ளன.

அதுபோல் புறநகா் ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரெயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புறநகா் ரெயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

புறநகா் அல்லாத ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 4 தரவரிசைக்குள் வரும் ரெயில் நிலையங்களுக்கு நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் படுத்தப்படும்.

அதன்படி, எளிதாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வசதி, குறைந்தபட்சம் இரு வாகனநிறுத்தும் வசதி, வாகன நிறுத்தத்தில் இருந்து ரெயில் நிலையத்தை எளிதாக அடையும் வசதி, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி, தகவல் மையம், நடைமேடையை எளிதாக கடக்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.

மேலும், முதல் தரத்தில் இருக்கும் ரெயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான சக்கர நாற்காலி அல்லது பேட்டரி வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News