உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

Published On 2024-08-20 05:58 GMT   |   Update On 2024-08-20 05:59 GMT
  • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
  • ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று கோரிமேடு, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், அத்வைத ஆசிரம ரோடு உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து சென்றவர்கள் தவியாய் தவித்தனர்.

மேலும் திடீரென பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் தாமதத்திற்கு பின்பே வீடு திரும்பினர். குறிப்பாக சாரதா கல்லூரி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியதால் வாகன ஓட்டிகள், மற்றும் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 1.3, ஏற்காடு 3.6, வாழப்பாடி, ஆனைமடுவு 2, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 11, ஏத்தாப்பூர் 3, கரியகோவில் 3, எடப்பாடி 1.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 46.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News