பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்தது
- பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
- கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவமழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் விரகனூர் அணையில் இருந்து கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை அபிராமம் பெரிய கண்மாயை வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்தது.
இதையடுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் அருணாசலம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். இதுகுறித்து விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-
அபிராமம் பகுதி வானம் பார்த்த பூமி ஆதலால் விவசாயம் பாதிப்படைந்து நெற் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் வைகை ஆறு மூலம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினருக்கும் மனு ெகாடுத்தும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தினோம்.
அப்போதே தண்ணீர் திறந்து இருந்தால் நெல் விவசாயம் பாதிப்படைந்து இருக்காது. தற்போது எங்களது கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அபிராமம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என்றார்.