தமிழகத்தில் வாகனங்கள் பதிவு மூலம் ரூ.11 ஆயிரம் கோடி வருமானம்
- அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
- தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு (2024) மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ம் ஆண்டு 2.40 கோடியாகவும், 2022-ம் ஆண்டு 2.15 கோடியாகவும், 2021-ம் ஆண்டு 1.89 கோடியாகவும் உள்ளன.
அதேபோல் வாகன பதிவு உள்ளிட்ட பரிமாற்றங்கள் மூலம் அரசுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு ரூ.87 ஆயிரத்து 670 கோடி வருமானம் வந்திருந்தது.
தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதன்பின் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவு, வாகனப்பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிக பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
வாகனங்கள் பதிவு உள்ளிட்டவை மூலம் வருமானம் ஈட்டியதில் வாகனங்கள் முதல் இடத்திலும், 2-வது இடத்தில் கர்நாடகமும், 3-வது இடத்தில் தமிழகமும், 4-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 5-வது இடத்தில் கேரளாவும் உள்ளன. இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அதில் கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டு 18.26 லட்சமும், 2022-ம் ஆண்டு 17 லட்சமும், 2021-ம் ஆண்டு 15.15 லட்சமும் பதிவாகி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் இருந்தது. இது முந்தைய ஆண்டினை (2023) விட 33.29 சதவீதம் ஆகும். கடந்த 2023-ம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் இருந்தது.
தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் பூந்தமல்லி, 3-ம் இடத்தில் கோவை வடக்கு, 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் கோவை தெற்கு உள்ளது. ஆனால் அதேநேரத்தில் வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மேற்கு முதலிடத்திலும், 2-வது இடத்தில் சென்னை தெற்கு, 3-வது இடத்தில் சென்னை மத்தியம், 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் பூந்தமல்லி ஆகிவையும் இருக்கின்றன.