உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்: நாளை தீக்குளிக்க போவதாக அறிவிப்பு

Published On 2025-03-03 10:51 IST   |   Update On 2025-03-03 10:51:00 IST
  • மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.
  • ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம்.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைபிடிப்பை கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழக மீனவர்களை கைது செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராதம் விதித்தும் அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

மேலும் மத்திய மந்திரி நேரில் வந்து மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக போராட்ட பந்தல் முன்பாக கியாஸ் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு உணவு தயார் செய்யப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் சென்றிருந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மீனவர்களை திடீரென்று சந்தித்தார். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கவர்னரிடம் வழங்கினார்.

அப்போது அவர்களிடம் பேசிய கவர்ன மத்திய, மாநில அரசுகளிடம் பேசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு சென்றார்.

காத்திருப்பு போராட்டத்தின் 4-வது நாளான இன்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்ட பந்தல் முன்பாக திருவோடுகள் கொண்டு வரப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் மீனவர்கள் அதனை கையில் ஏந்தி போராடினர்.

இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் ஒருவர் கூறுகை யில், எங்கள் போராட்டத் திற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நேரில் வந்த கவர்னரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றுள்ளார். இருந்தபோதிலும் மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.

இல்லையென்றால் நாளை நாங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனை எங்கே நடத்துவது என்பதை ரகசியமாக வைத்துள்ளோம். இந்த ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம் என்றார்.

Tags:    

Similar News