உள்ளூர் செய்திகள்

வாலாஜா பாலாறு அணைக்கட்டில் இருந்து 3686 கன அடி நீர் வெளியேற்றம்

Published On 2022-12-13 09:37 GMT   |   Update On 2022-12-13 09:37 GMT
  • கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • நீர் நிலைகளுக்கு சிறுவர்கள், பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பாலாறு அணைக்கட்டில் வினாடிக்கு 3,686 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம், தூசி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திர மாநில வன பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் அணையில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் வாணியம்பாடி, வேலூர் வழியாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாலாஜா அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 3,686 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் பாலாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் பாலாற்றின் கரையோரம் உள்ள 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News