கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் நடவடிக்கை
- ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை.
- இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முதலாக பணம் பிடிபட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சங்ககிரி பெருமாள்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் என தெரியவந்தது.
அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முதலாக பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.