விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட முட்டை ஓடுகளில் இருந்து புதிய கண்டுபிடிப்பு
- முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது.
- எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சி குழுவினர் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம், பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்சி அபடைட்டை செயற்கை முறையில் தயாரித்து உள்ளனர்.
அதாவது முட்டை ஓடுகளில் இருந்து இந்த கனிமத்தை தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓடுகளை விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கும், பல் மற்றும் எலும்பு உள் வைப்புகளுக்கான பூச்சுகளாகவும், எலும்பு திசு பொறியியல் பயன்பாடுகளுக்கான சாரக் கட்டுகளாகவும் பயன்படுத்தலாம். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-
விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கு முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எலும்பு விரிசல்களை குணப்படுத்த ஐந்தில் ஒரு பங்கு செலவு குறையும்.
இந்த முட்டை ஓடுகளை 100 டிகிரி சென்டிகிரேட்டில் மைக்ரோவேவ் கதிர்வீச்சை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றில் ஹைட்ராக்சி அபடைட் சோதனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ முட்டை ஓட்டில் இருந்து ஒரு கிலோ ஹைட்ராக்சி அபடைட்டை தயாரிக்கலாம். முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில் முட்டை ஓடுகள் ஆண்டுக்கு 91 மில்லியன் டன்கள் கிடைக்கிறது.
2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 18 சதவீதமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது முட்டை ஓடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ராக்சி அபடைட்டை கொண்டு விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
தற்போதுள்ள எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஓட்டுகள் விலை உயர்ந்தவை ஆகும்.
எனவே முட்டையில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி அதன் மூலம் எலும்பு விரிசல்களை சரிசெய்யும் இந்த முயற்சிக்கு பெரியார் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.