உள்ளூர் செய்திகள்

 கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.

களக்காடு அருகே சவுந்திர பாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-09 11:37 GMT   |   Update On 2022-06-09 11:37 GMT
  • களக்காடு அருகே சவுந்திர பாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • 3 கோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலத்துடன் நடத்தப்பட்டது.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தில் பழமை வாய்ந்த சவுந்தரபாண்டீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவில் உள்ளது.

தமிழகத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள பஞ்சஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணிகள் நடந்தது.

இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

அன்று மாலை 4 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகளும், 2-ம் நாளான 7-ம் தேதி காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், 3-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. 4-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் காலயாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பூர்ணாகுதி நடந்தது. அதன் பின் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள 3 கோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலத்துடன் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சவுந்தரபாண்டீஸ்வரர், கோமதி அம்பாள், ஆனந்த நடராஜர் சுவாமிகளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News