உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சீமான்: ஒரே நாளில் 3 வழக்குகள் பதிவு

Published On 2025-01-26 10:08 IST   |   Update On 2025-01-26 10:08:00 IST
  • சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் புகார்.
  • ஒரே நாளில் மட்டும் 2 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை யொட்டி தி.மு.க, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று 2-வது நாளாக காளைமாட்டு சிலை, மரப்பாலம் மற்றும் கச்சேரி வீதி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.

காளைமாட்டு சிலையில் தமிழர் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய அனுமதி இல்லாமல் கட்சி கொடிகள், பேனர்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் மரப்பாலம் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 8 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், கச்சேரி வீதியில் உரிய அனுமதி பெறாமல் தெருமுனை கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 6 பேர் மீது ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News