உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சொத்தை அபகரித்த அண்ணனை கண்டித்து கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள்

Published On 2022-09-12 13:41 IST   |   Update On 2022-09-12 13:41:00 IST
  • தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டு தங்களுக்கு பணம் தர மறுப்பதாக கூறி சகோதரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தாங்கள் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

திண்டுக்கல்:

பழனி ஆர்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் நாகரத்தினம்(40) மற்றும் முத்துமாணிக்கம்(42). சகோதரிகளான இவர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது தங்களது சகோதரர் போஸ் என்பவர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டு தங்களுக்கு பணம் தர மறுப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் தெரிவிக்கையில், பழனி ஆர்.எப்.ரோட்டில் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 60 செண்ட் நிலம் உள்ளது.

அந்த இடத்தை சகோதரர் போஸ் என்பவர் டாஸ்மாக் மற்றும் பார் வைக்க அனுமதி அளித்து அதில் வரும் வருமானத்தை தான் மட்டுமே அனுபவித்து வருகிறார். எங்களுக்குரிய பங்கை கேட்டபோது அதை தராமல் ஏமாற்றி வருகிறார். மேலும் அடியாட்கள் வைத்து மிரட்டி வருகிறார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு இப்பிரச்சினையில் உரிய தீர்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News